வத்தலக்குண்டு அருகே விவசாயம் செழிக்கவாழைப்பழம் சூறைவிடும் வினோத திருவிழா

0
138

 

வத்தலக்குண்டு அருகே விவசாயம் செழிக்கவாழைப்பழம் சூறைவிடும் வினோத திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள சேவுகம்பட்டி கிராமத்தில் விவசாயம் செழிக்கவும்,வேண்டுதல் நிறைவேறவும் வாழைப்பழம் சூறைவிடும் வினோத திருவிழா நடைபெற்றது. சேவுகம்பட்டி கிராமத்தில் ஓட்டக்கோவில் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் 200 ஆண்டுகள் பழைமையான சோலைமலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது.இக் கோவிலில் ஒவ்வொரு தமிழ் வருடம் தை மாதத்தில் 3 ஆம் தேதி வாழைப்பழம் சூறை விடும் விநோத திருவிழா நடைபெறும்.இவ்வருடத்திற்கான திருவிழா நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவும்,விவசாயம் செழிக்கவும் பெருமாளை வேண்டிக் கொள்கின்றனர்.கோரிக்கை நிறைவேற்றிய பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருவிழாவை நடத்தி வருகின்றனர். திருவிழா நாளில் வாழைப்பழ கூடைகளை தங்களது வீடுகளில் வைத்து பூஜை செய்தபின்பு  ஊரின் எல்லை தெய்வமான ரெங்கம்மாள் கோவிலிருந்து பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்களை நிரப்பி தலையில் வைத்து ஆண்கள் மட்டுமே சுமந்து வந்தனர். மேளதாளம் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பெருமாள் கோவிலுக்கு வந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்பு கோவிலின் மேற்புரத்திற்கு வாழைப்பழங்களைக் கொண்டு வந்து சூறைவிடப்பட்டது. கீழே விழும் வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக எண்ணி வயது வித்தியாசம் இன்றி அனைவரும் எடுத்துச் சென்றனர்.இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திருவிழா நாளன்று தவறாமல் கலந்து கொள்கின்றனர். இத்திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பெருமாளின் பிரசாதமாக வாழைபழங்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here